Wednesday, 28 September 2011

கனவு

காய்கறி அறியும்போது
தவறுதலாய்
அறிவாள்மனையில்
கை பட்டதும்
இரத்தம் சொட்ட....
திடுக்கிட்டு எழுந்தேன்
கனவுக்கெப்படி தெரியும்
நீ
சமையலறையே காணாதவளென..!

Saturday, 24 September 2011

பெருத்த வலியினொடு

வயிற்றில் எட்டி உதைத்து
இந்த உலகைக் காண
வெளியேறத் துடிக்கும்
உன் உந்துதலில்
என்
பிறப்புறுப்பில் ஏற்படுத்திய
எல்லையிலா வலியினொடு
உனை ஈனும் நிமிடங்களில்
உன்
முதல் குரல் கேட்டபடியே கண்ணயர்ந்தேன்.
உடலின் வெப்பம்
வெகுவென குறைந்து
போர்வைகளுக்குள் நடுங்கியபடியே
இடுப்பின் வலி நீங்காது
துடித்தபடி கிடந்தேன் - கூடவே
நீ பிறந்ததும்
அள்ளி அணைக்கமுடியா
பெருத்த வலியினொடும்...
                                                by  suresh

Monday, 19 September 2011

வரம்

நிறைகுடம் சுமந்து
நீ செல்கையில்
சில துளிகள் மட்டுமே
வரம் பெற்றிருக்கின்றது
உன்
இடையினில் வழிந்தோட....!

Monday, 12 September 2011

வினையாலணையும் காதல்

நான்
உன்னை கலைத்தேன்
நீ
என்னை கலைத்தாய்...

நான்
உன்னில் மூழ்குகிறேன்
நீ
என்னுள்  மூழ்குகிறாய்...

நீயும் கடல்
நானும் கடல்

தாகம் கடலுக்கு...

வைத்த மல்லியும்
மூச்சுத் திணறி
மாய்த்துப்போனது...

கலைந்து கிடக்கும்
ஆடைகளை போலதான்
இப்போது
நம் நிலையும்...

ஆடைகளுக்கும் சிறுவருத்தம்
தன் பங்கீடு
குறைந்ததை எண்ணி...

சொர்க்கத்தின் எளியவழி
கண்டுகொண்டோம் நம்மிடமே...

இருப்பினும்
இருட்டின் வேலைநேரம்
நீட்டிக்கப்பட வேண்டும்!

Wednesday, 7 September 2011

சிறுவயது உலகம்

தேங்கிய மழைநீரில் ஆடிக்கொண்டபடியோ...

வேலிகாத்தான் முட்செடிமீது
தலைதூக்கிப் பார்த்துக்கொண்டிருக்கும்
ஓணானை
வலையிட்டு பிடித்தபடியோ...

வழிநெடுக நிற்கும்
நாவல் மரங்களிலும்;புளிய மரங்களிலும்
பழங்கள் பறிக்கும் முயற்சியில்
மரத்தின் மீதேறியோ
கற்களை வீசியபடியோ...

உனிமுள் பூக்கள் பறித்து
ஒருவர் மீதொருவர் பூக்களை சொறிந்தபடியோ...

என வீடு திரும்பும்
பள்ளி சிறுவர்கள் உலகத்தில்
கற்க நிறைய இருக்கிறது!