Wednesday, 20 July 2011

போஸ்ட் ஆபீஸ்

போன வருட
பொங்கலுக்கு
சந்தையில் வாங்கிய
குப்பனின் டவுசர்
இப்போது
"போஸ்ட் ஆபீஸ்....."

புதுசு வேண்டுமென
அழுது
அடம் பன்னியதின்
பலனாக
மூடப்பட்டது
"போஸ்ட் ஆபீஸ்.....!"

Tuesday, 12 July 2011

பலவித உண்ணல் முறையை குறிக்கும் சொற்கள்

உறிதல்            - நீர்ப்பொருளையும் கூழ்மம் போன்ற நெகிழ்ச்சிப் பொருளையும்
                                காற்றால் வாய்க்குள் இழுத்தல்.
பருகுதல்          - நீர்கலத்திற் பற்படக் குடித்தல்.
அருந்துதல்     - சிறிது சிறிதாகக் குடித்தல்.
மாந்துதல்        - பேரளவாக குடித்தல்.( மாந்து மாந்தென குடிக்கிறான் என்பது
                                வழக்கு.
குடித்தல்          - நீர்ப்பொருளை இயல்பாக உட்கொள்ளுதல்.
சப்புதல்           - ஒன்றினை மெல்லாமல் நாவிற்கும் அண்ணத்திற்கும் 
                               இடையிலிட்டு நெருக்கி அதன் சாறினை மெல்ல மெல்ல
                              உறிஞ்சுதல் அல்லது அப்பொருளினை சிறிது சிறிதாகக்
                              கரைத்தல்.
சுவைத்தல்    - ஒன்றை மென்று அதன் சுவையை நுகர்தல்.
சவைத்தல்    - மெல்லிய பொருளை மெல்லுதல்.(குழந்தை தாய்ப்பாலைச்
                              சப்புதல்)
சூம்புதல்(சூப்புதல்)-தித்திப்புக் குச்சும்,மூளையெலும்பும்,விரலும் வாயிலிட்டு
                                         சப்புதல்.
தின்னுதல்    - பழம்,பலகாரம் போன்ற சிற்றுண்டியை மென்று உட்கொள்ளல்.
உண்ணுதல் - கவளங் கவளமாகச் சோற்றை உட்கொள்ளல்.
சாப்பிடுதல்  - குழம்பும் சாறும் மோரும் (அல்லது அவற்றுள் ஒன்று) கலந்த
                             சோற்றினைக் கவளங் கவளமாகக் கறிவகைகளுடன் (அல்லது
                             அவையின்றி )உட்கொள்ளல்.
அசைத்தல்  - விலங்கு அசையிடுதலைப் போல் அலகை அசைத்து உண்ணுதல்.
அயிலுதல்     - குழந்தை அளைந்து சோறுண்ணுதல்.
விழுங்குதல் - மெல்லாமல் சுவை பாராமல் ஒரே தடவையில் விரைந்து
                               வாய்வழி வயிற்றிற்குள் இடுதல்.
ஆர்தல்            - வயிறு நிரம்ப உண்ணுதல்.
மொசித்தல்   - பலர் கூடி உண்ணதல்.
மிசைதல்       - விருந்தினரை உண்பித்து மிஞ்சியதை உண்ணுதல்.

Wednesday, 6 July 2011

நீயும் நானும்


*  தெளிந்த ஓடையில்
    தெரியும்
    கூழாங்கற்களைப் போலவே
    உன் நினைவுகளும்
   அடி மனதில்
   அழகாய் சிதறியபடி...

*  ஒவ்வொரு கூழாங்கற்களை
    எடுக்கும்போதும்
    ஒரு சலசலப்பு இருப்பதைப்போலவே
    உன் நினைவுகளும்
    ஏற்படுத்தவே செய்கிறது.

*  உன்னை ஞாபகப்படுத்தும்
   அநேக அடையாளங்களால்
   சில பொருட்களில்
   உன்னை பதித்துவிட்டு
   சென்றிருக்கிறாய்
   உனக்கு தெரியாமலேயே...

*  எங்கோ ஒரு மூலையில்
    நீயும் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்
    என்னைப் பற்றிய நினைவுகளை
    சுமந்துகொண்டு.....
    என்னைப்போலவே.....
                                     by suresh

காதல் வசம்


*  ஊசித்தூறல் பட்டு
   பாறைகள் உடைபடுவதில்லை- ஆனால்
   உன் ஊசிப்பார்வையில்
   நெஞ்சம் உடைபடுகிறதடி.....

*  கடலலைகள் பட்டு
    கரைகள் கரைவதில்லை- ஆனால்
    உன் நினைவலைகளில்
    மனம் கரையுதடி.....

*  வெய்யில் பட்டு
    காகம் வெளுப்பதில்லை- ஆனால்
    உன் நிழலினினால்
    ஜீவன் வெளுக்குதடி.....

*  மின்னல் பட்டு
    மின்மினி ஒளிர்வதில்லை- ஆனால்
    உன் கண்களினால்
    காதல் ஒளிர்கிறதடி.....

*  தென்றல் பட்டு
    வேர்கள் சிலிர்ப்பதில்லை- ஆனால்
    உன் கைவிரல் தீண்டலில்
    உயிர் சிலிர்க்குதடி.....
                                        by suresh




நினைவுகள்

* நானறியா நேரங்களில்
  நினைவின்
  சாளரம் திறந்து
  வருகிறாய்!

* கடந்துபோன நிஜங்களின்
  நிழல் ஓவியத்தின்
  வர்ணங்களில் சிக்கி
  பாறாங்கல்லாய் கணக்கிறது
  இதயம்!

* எதையும் மறப்பதற்கில்லை
  பூக்களின் வாசம்போல்
  புதைந்துகிடக்கின்றது
  பார்வைக்கு மட்டும்
  அகப்படாமல்!
                          by suresh

இலையுதிர் காலம்

*  மழை வேண்டி
    மரங்கள் நடத்தும்
    நிர்வாணப் போராட்டம்.!



பேச்சு சுதந்திரம்

*  எனக்கு பிடித்த விளையாட்டு
    பம்பரம் விடுதல் என்றேன்
    நீ ம.தி.மு.க வா..?என்றார்கள்!

*  பழங்களில் விரும்பி சுவைப்பது
    மாங்கனி என்றேன்
    நீ பா.ம.க வா..?என்றார்கள்!

*  செடிகளின் அழகு
    இலைகள்
    துளிர்க்கையில் என்றேன்
    நீ அ.தி.மு.க வா..?என்றார்கள்!

*  அதிகாலை வழிபடுவது
    சூரியனை என்றேன்
    நீ தி.மு.க வா..?என்றார்கள்!

*   பேசாமல் கட்சிகளுக்கு
    வழக்கத்திலில்லா உருவம்
    சின்னமாக அறிவிக்கலாம்-சிறிதேனும்
    கிடைக்கும்
    பேச்சு சுதந்திரம்!